

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர் பாபு ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்குப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் இணைந்து கொளத்தூர் தொகுதியில் அனைத்து வார்டுகளுக்கும் இன்று (17.11.2021) நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசுப் பணிகளில் ஈடுபட்டதால், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இணைந்து பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிட உத்திரவிட்டிருந்தார்.
அதன்படி, முதலில் வார்டு எண்.69இல் ஞானம்மாள் தோட்டம் பகுதிக்குச் சென்ற அமைச்சர்கள், பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் துணிப் பைகளில் அடைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்வையிட்டனர். ஒவ்வொரு பையிலும் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து திருப்தி அடைந்தபிறகே பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியை மேற்கொண்டனர். இதில் அரிசி, போர்வை உட்பட 12 பொருட்கள் இடம் பெற்றிருந்தன.
வார்டு எண்.68இல் உள்ள திரு.வி.க. நகர் பகுதியில் மழை நீரால் சேதமடைந்த அனைத்துத் தெருக்களையும் சாலைகளையும் பார்வையிட்டு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள், சிறு சிறு பாதிப்புகளை உடனடியாகச் சீரமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதேபோல் வார்டு எண்.67இல் உள்ள ராமர் கோயில் பகுதி மூர்த்தி தெரு, ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கும் சென்று சேதமடைந்த தெருக்களையும், தண்ணீர் தேங்கி, மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்த பின்னர், பொதுமக்களைச் சந்தித்த அமைச்சர்கள் குறைகளைக் கேட்டறிந்தனர்.
வார்டு எண்.65 மற்றும் 64இல் உள்ள ராஜாஜி நகர் டாக்டர் அம்பேத்கர் நகர், வினோபா நகர், கங்கா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து உடனடியாகச் சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
கொளத்தூர் தொகுதி முழுவதும், நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கேட்டறிந்த அமைச்சர்கள், மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியிலுள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.