

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“வங்கக் கடல் பகுதியில் கடந்த 13-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
இன்றும், நாளையும் மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.