Published : 17 Nov 2021 12:55 PM
Last Updated : 17 Nov 2021 12:55 PM

மூடியிருக்கும் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளைத் திறந்து கரும்பு அரவை: கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை 

சென்னை

மூடியிருக்கும் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளைத் திறந்து கரும்பு அரவை செய்திட வேண்டும் என்று மாநில அரசுக்குத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகத்தில் அதிக அளவு மழை பொழிந்து அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடியிருக்கும் நேசனல், தருமபுரி, திருப்பத்தூர், ஆம்பூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளை 2021-22இல் திறந்து கரும்பு அரவை செய்திட வேண்டும் என மாநில அரசைத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மூடியிருக்கும் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளைச் செயல்படுத்தாமல் விட்டால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சாகுபடி செய்த கரும்பைக் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

2011- 12இல் 22.5 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்த தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்து 2020- 21இல் ஒன்பது லட்சம் டன்களாக சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு பண பாக்கி முழுவதையும் அரசு வழங்கிவிட்டது. தற்போது கரும்பு பண பாக்கி இல்லை என்கிற நிலை கரும்பு விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மூடியிருக்கும் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளைத் திறந்து 2021-22 பருவத்திற்கு கரும்பு அரவையைச் செய்தால் நல்ல மழை பெய்துள்ள சூழலில் கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரித்து சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும். எனவே, சேவை அடிப்படையில் மாநில அரசு கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்கு, புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியை வழங்கி ஆலைகளைப் புனரமைத்து 2021-22இல் கரும்பு அரவை செய்ய வேண்டும்.

2020- 21இல் அரவை செய்த கரும்புக்கு ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.42.50 வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு இதுவரை அதற்கான பணம் வழங்கப்படவில்லை. உடனடியாக அந்த ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டுகிறோம். இதேபோல சிறப்பு ஊக்கத்தொகை ஒரு டன் கரும்புக்கு ரூ.150 வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தபடி சிறப்பு ஊக்கத் தொகையையும் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

மூங்கில் துறை பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி 1, கச்சிராயபாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி 11 கூட்டுறவுச் சர்க்கரை ஆலை பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. கே1 ஆலைக்கு 13,000 ஏக்கரும், கே11 ஆலை 13,000 ஏக்கருக்கும் கூடுதலாக கரும்புப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சாகுபடி செய்த கரும்பு இருப்பதாகவும் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை பதிவு செய்ய மறுப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கூட்டுறவுச் சர்க்கரை ஆலையை நம்பி சாகுபடி செய்த கரும்பைப் பதிவு செய்ய மறுப்பது விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகள் பயிரிட்ட கரும்பு முழுவதையும் கே1, கே11 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பதிவு செய்திட வேண்டும். ஆலையின் அரவை தேவைக்கு மேல் கூடுதலாக உள்ள கரும்பை வேறு ஆலைகளுக்கு அனுப்பி அரைத்திட மாநில சர்க்கரைத் துறை ஏற்பாடு செய்திட வேண்டும்.

கே1 கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இணை மின்சார உற்பத்தித் திட்டத்தின் பாதிப் பணிகள் முடிந்து கிடப்பில் போடப்பட்டுவிட்டது. கே1-ல் கிடப்பில் போடப்பட்ட இணை மின்சார உற்பத்தி திட்டப் பணிகளை நடப்பு ஆண்டிலேயே முழுமைப்படுத்திச் செயல்படுத்த வேண்டும்.

செய்யாறு கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் எத்தனால் பிளான்ட் அமைத்திட வேண்டும். அம்பிகா, ஆரூரான், தரணி தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் கரும்பு பண பாக்கியை வைத்துவிட்டு தேசியக் கடன் தீர்ப்பாயத்திற்குச் சென்றுவிட்டனர். விவசாயிகளுக்கு மேற்கண்ட தனியார் சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய கரும்பு பண பாக்கி முழுவதையும் பெற்றுத்தர வேண்டும் என மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறோம்’’.

இவ்வாறு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x