Published : 17 Nov 2021 12:07 PM
Last Updated : 17 Nov 2021 12:07 PM

ரூ.23.78 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக ரூ.23.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17.11.2021) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள் மற்றும் 3 பள்ளிக் கட்டிடங்களைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் 2 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், வல்லத்தில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் 2 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோட்டூர் மற்றும் நன்னிலத்தில் தலா 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 5 ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம்; திருச்சி மாவட்டம் செங்காட்டுப்பட்டியில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் மாவட்டம் அத்தனாவூரில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பழங்குடியினர் பள்ளி மாணவ, மாணவியர் விடுதிக் கட்டிடங்கள்; நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 1 கோடியே 54 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 3 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் நீலகிரி மாவட்டம் மு.பாலாடாவில் 1 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடங்கள் என மொத்தம் 23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் வி.சி.ராகுல், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x