

எழுத்தாளரும், நடிகருமான ‘பாட்டையா’ பாரதி மணி நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.
நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் பிறந்த பாட்டையாவின் இயற்பெயர் மணி. 2000ஆம் ஆண்டு வெளியான‘பாரதி’ படத்தில் பாரதியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததால் அதன் பிறகு பாரதி மணி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். ‘பாபா’, 'ஆட்டோகிராஃப்’, ‘ஒருத்தி’ ‘புதுப்பேட்டை’, ‘அந்நியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இலக்கிய வட்டாரத்தில் அன்பாக ‘பாட்டையா’ என்று அழைக்கப்படும் மணி பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். ‘பல நேரங்களில் பல மனிதர்கள்', ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’, ‘பாட்டையாவின் பழங்கதைகள்’ உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவ.16) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் திரை பிரபலங்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.