

மதிமுகவில் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் பணிகள் என்னென்ன என்பது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பட்டியலிட்டு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
1. மறுமலர்ச்சி திமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
2. கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது.
கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.
3. கழகப் பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார்.
4. கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்;
அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.
5. மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த அக். 20 ஆம் தேதி, மதிமுகவின் மாவட்டச் செயலர்கள், உயர்நிலை, ஆட்சிமன்றம், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.
அப்போது, அக்கூட்டத்தில், மதிமுக தலைமை நிலையச் செயலாளராக வைகோவின் மகன் துரையை நியமித்து உத்தரவிட்டார்.
திமுகவின் ‘போர்வாள்’ என அனைவராலும் அழைக்கப்பட்ட வைகோ, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவைத் தொடங்கினார். தொடக்க காலத்தில் இளைஞர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்த மதிமுக, தமிழகத்தில் நங்கூரம் பாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த அளவுக்கு ஏற்றம் காணப்பட்ட மதிமுக, தேர்தல் மற்றும் அரசியலில் ஏற்பட்ட சரிவு காரணமாக வீழ்ச்சியை சந்தித்தது.
திமுக - அதிமுகவுடன் மாறி மாறிக் கூட்டணி அமைத்தல், தனித்துப் போட்டி, தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்குத் தலைமை வகித்தது என ஒவ்வொரு தேர்தலிலும் தலைமையின் நிலைப்பாடுகள் மாறுபட்டு இருந்ததால், மக்கள் புறக்கணிக்கின்றனர் எனக் கூறி, வைகோ மீது மூத்த தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செஞ்சி ராமச்சந்திரன், பொன்.முத்துராமலிங்கம், எல்.கணேசன், கண்ணப்பன், மாசிலாமணி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து வெளியேறினர்.
வாரிசு அரசியலை எதிர்த்து, தான் சார்ந்து இருந்த திமுகவில் இருந்து விலகி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து மதிமுகவை தொடங்கிய வைகோ, தற்போது வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ளும் வகையில், அவரது மகனுக்கு கட்சிப் பதவியை வழங்கியுள்ளார் என குற்றச்சாட்டு குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.