

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு வெறும் ரூ.20,000 அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. அதேபோல் பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி நவ.22 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (நவ.17) தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.
தொடர்ந்து அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நாள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை பாஜக சார்பில் வழங்க உள்ளோம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதே முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.
தற்போது ஆளும் கட்சியாக வந்த பின்பு, தான் சொன்னதையும் மறந்துவிட்டு விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் எனக் குறைத்து வழங்கி அறிவிப்பு செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நிவர் புயலின்போது அவர் கூறியபடியே ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற பாஜக கோரிக்கைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கி வாருங்கள் என்று கூறுகிறார். இது, ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சு அல்ல.
மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய பேரிடர் நிதி 300 கோடி ரூபாய் முழுமையாக வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நீர்வழித்தடங்களை சரிவர தூர்வாராததே காரணம். 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணிகளை 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே செய்துள்ளது.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்ற முதல்வர் முழுமையாக ஆய்வு நடத்தவில்லை. விவசாய நிலங்களில் இறங்கி பயிர்களின் சேதங்களை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே உண்மையான சேத விவரத்தை அறிந்து அவரால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முடியும் " என்று கூறினார்.
பெட்ரோல் விலையை குறைக்க வேண்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்:
அதேபோல், "தமிழகத்தில் பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது மூன்று ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது திமுக அரசு. பாஜக ஆனாலும் அனைத்து மாநிலங்களிலும் ஏன் காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் கூட பெட்ரோல் விலை 9 ரூபாய், எட்டு ரூபாய், பத்து ரூபாய் என குறைத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏன் பெட்ரோல் விலை குறைப்பதற்கு திமுக தயக்கம் காட்டி வருகிறது எனத் தெரியவில்லை.
தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.