Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இரண்டரை வயது தமிழக சிறுவன்

சென்னை எண்ணூரைச் சேர்ந்த திபின் - திவ்யா தம்பதியரின் இரண்டரை வயது மகன் ரித்தின்கலிகோட், ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்.

பெங்களூருவில் வசித்து வரும் இந்த தம்பதியரின் மகன் ரித்தின் கலிகோட், சிறுவர்களுக்கான கதைபுத்தகங்கள், கார்ட்டூன் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், அவை செய்யும் தொழில்கள் ஆகியவற்றை மனப்பாடமாக கூறியிருக்கிறான்.

இதையடுத்து, பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள், கிரகங்கள், காட்டு விலங்குகள், வடிவங்கள், நிறங்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் சொல்லிக் கொடுத்தனர்.

இந்த பயிற்சியின் காரணமாக தற்போது சிறுவன் ரித்தின், ஒன்று முதல் முப்பது வரையிலான எண்கள், 10 வகை நிறங்கள், 20 நாடுகளின் தேசியக் கொடிகள், 9 கிரகங்கள், 40 வீட்டு உபயோகப் பொருட்கள், 18 உடல் பாகங்கள், 20 வனவிலங்குகள், 10 வீட்டு விலங்குகள், 18 வடிவங்கள், 20 மலர்கள், 24 காய்கறிகள், 18 தொழில்கள், 20வாகனங்கள் ஆகியவற்றை துல்லியமாக அடையாளம் கண்டு சொல்கிறான். அதுமட்டுமின்றி, 4 குழந்தைப் பாடல்கள், ஆங்கில உயிர் எழுத்துகள் ஆகியவற்றையும் மனப்பாடமாக கூறுகிறான்.

இந்நிலையில், இதுகுறித்து அறிந்த ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிர்வாகிகள், ரித்தினின்இந்த திறமைகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்தியாவிலேயே இரண்டரை வயதில் இவ்வளவு விஷயங்களை இதுவரை யாரும் கூறியதில்லை என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதன்தொடர்ச்சியாக, இந்திய சாதனைப் புத்தகத்தில் சிறுவன் ரித்தினின் பெயர் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x