Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை எச்சரிக்கை

கோப்புப்படம்

சென்னை

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி (நாளை) தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 17-ம் தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

18-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். இதனால், இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

நவ.17, 18-ம் தேதிகளில் மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x