Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்

கோப்புப்படம்

சென்னை

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அஸ்வின், துணைத் தலைவர் மருத்துவர் ராஜு பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

சிம்ஸ் - எஸ்ஆர்எம் மருத்துவ நிறுவனம் சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரிமலை அடிவாரத்துக்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், 2 மாத காலத்துக்கு அங்கேயே இருந்து தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர் 3 செவிலியர் கொண்ட மருத்துவக் குழு இருக்கும்.

சபரிமலை செல்பவர்கள் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. பக்தர்கள் அந்த மையங்களை பயன்படுத்தி சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளலாம்.

அறநிலையத்துறை கல்லூரி தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவோம்.

சென்னையை சிங்கப்பூராக ஆக்கிவிட்டோம் என தேர்தலின்போது பழனிசாமி கூறினார். ஆனால், பருவமழைக்கு சென்னை நகரம் தத்தளித்தது. கடந்த காலங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதி எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை. வடிகால் வசதி தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x