கோப்புப்படம்
கோப்புப்படம்

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் உபரிநீர் திறப்பு 1000 கன அடியாக உயர்வு

Published on

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் உபரிநீர் திறப்பு 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புறநகரில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால், கடந்த 7-ம் தேதி உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரிநீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், 2,999 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 21.55 அடியாகவும், நீர்வரத்து 525 கன அடியாகவும் இருந்தது.

நீர்மட்டம் 22 அடியை தொட உள்ளதால் தற்போது உபரிநீர் திறப்பு 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கூடுதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் நந்திவரம், ஊரப்பாக்கம், மணிமங்கலம், மண்ணிவாக்கம், செம்பாக்கம், அகரம்தென் போன்ற ஏரிகளில் இருந்து கூடுதல் நீரை வெளியேற்ற, இந்த ஏரிகளில் உள்ள ஷெட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை ஏரிகளில் 798 நிரம்பின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மொத்தம் 798 ஏரிகள் நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகள், சென்னையில் உள்ள 16 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 93 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 ஏரிகள் என மொத்தம் 1,022 ஏரிகள் காஞ்சிபுரம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 262 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 444 ஏரிகள், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3 ஏரிகள் என மொத்தம் 798 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

மேலும் 176 ஏரிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ளது. 48 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான நீர் இருப்பே உள்ளது. கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்து ஏரிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தள்ளது என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in