சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சடலமாக மீட்பு

சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சடலமாக மீட்பு
Updated on
1 min read

சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி படித்து வந்த மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த மாணவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.அபிநாத் என அடையாளம் தெரியவந்துள்ளது.

இது குறித்து சாய்ராம் கல்லூரி நிர்வாகி சாய்பிரகாஷ் லியோ முத்து கூறும்போது, "மாணவர் அபிநாத் எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவராவதே அவரது லட்சியமாக இருந்துள்ளது. ஆனால், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் அவர் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

இதனால் மிகுந்த ஏமாற்றத்திலிருந்த அபிநாத் பொறியியல் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாமல் தவித்து வந்தார். நடந்த முடிந்த செமஸ்டரில் அவர் சில பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் இந்த துரதிர்ஷ்ட முடிவை எடுத்துள்ளார். நாங்கள் இச்சம்பவத்துக்காக வருந்துகிறோம். இச்சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பில்லை" என்றார்.

'வதந்திகளை நம்பாதீர்'

அவர் மேலும் கூறும்போது, "சமூக வலைதளங்களில் மாணவர் மரணம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்றார்.

'துளிகூட நம்பிக்கை இல்லை'

ஆனால், கல்லூரி மாணவர்கள் சிலர் அபிநாத் மரணம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றனர். அபிநாத்துடன் அறையில் தங்கியிருந்த பி.கவுதம் என்ற மாணவர் கூறும்போது, "இரண்டு நாட்களுக்கு முன்னர் வார்டன் அனுமதியில்லாமல் வெளியில் சென்றதற்காக அபிநாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அபிநாத் சோர்வாக இருந்தார்" என்றார்.

பெயர், அடையாளம் தெரிவிக்க விரும்பாத மற்றொரு மாணவர் கூறும்போது, "கல்லூரி விடுதியை வளாக நிர்வாக இயக்குநர் பாலு ஏற்று நடத்தி வருகிறார். அவர் மாணவர்களை எப்போதுமே தரக்குறைவாக நடத்துவார். சம்பவத்தன்று திடீரென்று அனைவரையும் விடுதி அறையிலிருந்து வெளியேறும் கூறினர். ஆனால் அதற்கான காரணத்தை முதலில் சொல்லவில்லை. பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வு என்றும், வெடிகுண்டு மிரட்டல் என்றும் மாறி மாறி காரணம் கூறினர். கல்லூரி நிர்வாகம் மீது எங்களுக்கு துளிகூட நம்பிக்கை இல்லை" என்றார்.

சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கடுமையான விதிமுறைகள், கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுவதாக அண்மையில் அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடந்து ஒரு சில மாதங்களே ஆன நிலையில் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in