

மதுரையில் பாமக முன்னாள் மாநில நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியவர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை மேல அனுப்பானடி ராஜமான் நகரைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (31). இவர் பாமக மாநில இளைஞரணித் துணைச் செயலராக இருந்தார். இவர் நேற்று காலை செல்லூருக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இவரது மனைவி, குழந்தை வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு காலை 9.30 மணி அளவில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து மாரிசெல்வம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் பயங்கர சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் மாரிசெல்வத்தின் மனைவி வெளியே வந்து பார்த்தபோது, வாசல் அருகே அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதும், அங்கிருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடுவதையும் பார்த்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மாரிசெல்வத்திற்கு அவரது மனைவி உடனே தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல் அறிந்து கீரைத்துரை காவல் ஆய்வாளர் பெத்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடன் வந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் சம்பவ இடத்தில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்பதைக் கண்டறிந்ததுடன், வெடித்துச் சிதறிய துகள்களைச் சேகரித்துக் கொண்டனர். வெடிகுண்டு வீசியது யார் என்பதைக் கண்டறியும் வகையில் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிந்த சிசிடிவி கேமரா பதிவுகளைச் சேகரித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதல் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘‘தெப்பக்குளம் காவல் நிலையத்தில் சமீபத்தில் பாலியல் தொழில் தொடர்பாக மாரிசெல்வம் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டதாகவும், அதன்பின், அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாரிசெல்வம் தரப்பில் 3 பேர் மீது புகார் அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி பதிவுகள் மூலம் குண்டு வீசியவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்’’ எனத் தெரிவித்தனர்.