Published : 16 Nov 2021 04:02 PM
Last Updated : 16 Nov 2021 04:02 PM

'ஜெய் பீம்' - முற்போக்காளர்கள் வரவேற்கவேண்டிய படம்: கி.வீரமணி

கோப்புப்படம்

சென்னை

‘ஜெய் பீம்’ என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான திரைப்படத்தை முற்போக்காளர்கள் வரவேற்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஞானவேல் இயக்கத்தில் திரைக் கலைஞர்கள் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘ஜெய் பீம்‘ என்ற திரைப்படம் சமூக நீதி, பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுவாக திரைப்படங்களின் இன்றைய நிலை என்ன?

திரைப்படம் என்றால் வெறும் பொழுதுபோக்கு - இளைஞர்களை ஈர்க்க சண்டைக் காட்சிகள், அரைகுறை ஆடைக் காட்சிகள் - இரட்டைப் பொருள் தரும் வசனங்கள் என்று ஆகிவிட்ட நிலையில், மனித குலத்தின் பெருநோயான சாதியின் காரணமாக ஆண்டாண்டு காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் திரைப்படம்தான் ‘ஜெய் பீம்.’

காவல்துறையின் அணுகுமுறை

திருட்டு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத நிலையில், காவல்துறைக்கு ‘ஊருக்கு இளைத்தவர்கள்’ குறவர், இருளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிதர்சனமான உண்மையைப் படம் பிடித்துக் காட்டியதன் மூலம், அம்மக்களின் அவலநிலை பொதுப் புத்தியின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையின் செயல் முறைகளிலும் ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

நியாயமற்ற எதிர்ப்பு!

இந்த நிலையில், ஏதோ ஒரு சாதிக்கு எதிராகப் படம் எடுக்கப்பட்டது போன்ற வகையில் அப்படத்திற்கு எதிர்ப்பு காட்டுவதும், திரைப்படம் ஓடும் திரையரங்குகளின் முன் போராட்டம் நடத்துவதும், நடிகர் சூர்யாவை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் பேசுவது என்பது எல்லாம் ஆரோக்கியமானதுதானா?

நடிகர் சூர்யாவின் விளக்கத்திற்குப் பிறகும்...

குறிப்பிட்ட காட்சி பற்றி பிரச்சினை எழுப்பப்பட்ட நிலையில், அந்தக் காட்சி நீக்கப்பட்ட பிறகும், நடிகர் சூர்யா தரப்பில் படம் பற்றி விளக்கப்பட்ட பிறகும், எல்லை தாண்டிய அளவிலான விமர்சனம், வன்முறை, ஏவல் என்பதெல்லாம் சரியானது தானா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

தந்தை பெரியாரைப் போற்றுவோர் பார்வைக்கு...

தந்தை பெரியாரைப் போற்றுவதாகவும், பின்பற்றுவதாகவும் கூறுவோர், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஊக்கம் கொடுக்காமல், பொதுமக்களுக்கும், தங்கள் கட்சியை, அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தக்க விளக்கம் அளித்து ஆற்றுப்படுத்துமாறு வேண்டுகிறோம்.

அரசியல் பாதைக்கும், பயணத்திற்கும் அதுவே உகந்ததாக இருக்க முடியும் என்பதை உணர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பிட்ட கட்சிக்கு சாதிதான் அடையாளம் என்ற நிலையும் நல்லதல்ல!''

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x