Published : 16 Nov 2021 12:58 PM
Last Updated : 16 Nov 2021 12:58 PM

இயல்புக்கு வந்த ரயில் சேவை; கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருக: ராமதாஸ் 

சென்னை

ரயில் சேவை இயல்புக்கு வந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''இந்தியாவில் கரோனா நோய்ப் பரவல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தது போன்று வழக்கமான அளவில் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருக்கிறது. இது இந்தியாவின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும் என்பதைக் கடந்து ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த முடிவு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான போக்குவரத்துக்கு முதுகெலும்பாகத் திகழ்வது ரயில் சேவைகள்தான். உள்ளூர் அளவிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இயக்கப்படும் ரயில்கள் தவிர மொத்தம் 1,768 விரைவு ரயில்களை ரயில்வே வாரியம் இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

அதன்பின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக சில வண்டிகள் மட்டும் இயக்கப்பட்டன. நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. கரோனா வைரஸ் பரவல் இப்போது கிட்டத்தட்டக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பதால்தான் இப்போது நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் அனைத்து வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் கட்டண விகிதத்தில் ரயில்வே துறை பாகுபாடான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல. கரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 30% கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான 50% கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டு, முழுமையான கட்டணம், அதுவும் உயர்த்தப்பட்ட சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சிறப்பு ரயில்களில் சலுகை வழங்க முடியாது என்பதைக் காரணம் காட்டி இது நியாயப்படுத்தப்பட்டது.

கரோனா பாதிப்பு காலத்திற்கு முந்தைய கால அட்டவணைப்படி அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும், இப்போது வழக்கமான ரயில்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன. அதேபோல், அந்த வண்டிகளுக்கான வழக்கமான கட்டணங்களும், கட்டணச் சலுகைகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இனிவரும் காலங்களில் இந்த ரயில்களில் பயணம் செய்வதற்காக, இதற்கு முன்பு முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திருப்பித் தரப்படாது என்று வாரியம் அறிவித்துள்ளது. இது நியாயமல்ல.

ரயிலுக்கான கட்டணம் என்பது பயணத் தேதிக்கான கட்டணத்தையே குறிக்கும். கடந்த காலங்களில் ரயில்வே கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்கள், பயணம் செய்யும்போது உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கும், அவர்கள் முன்பதிவின்போது செலுத்திய தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை வசூலிக்கப்படும். அது எவ்வாறு நியாயமோ, அதேபோல், பயணக் கட்டணம் குறைக்கப்படும்போதும், முன்பதிவின்போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அவ்வாறு கூடுதலாகச் செலுத்தப்பட்ட தொகையைத் திருப்பித் தருவதுதான் முறை. ரயில்வே அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக முன்பதிவு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்களைத் தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் 65% வரை கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். அவர்கள் பல்வேறு நெருக்கடிகளையும், சிரமங்களையும் சந்தித்து ஈட்டிய பணத்தைக் கட்டணம் என்ற பெயரில் பறித்துக் கொள்வது முறையல்ல. எனவே, நடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு முன்பதிவு செய்த அனைவருக்கும் கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருவதற்கு ரயில்வே துறை முன்வர வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x