அறந்தாங்கி அருகே மாணவர்களின்றிச் செயல்பட்டு வந்த பள்ளியில் 5 மாணவர்கள் சேர்ப்பு: முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவிக்குப் பாடப்புத்தகம் வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவிக்குப் பாடப்புத்தகம் வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணவர்களின்றிச் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப் பள்ளியில் 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.

கோங்குடி ஊராட்சி அல்லம்பட்டியில் கடந்த 1996-ல் 50 மாணவர்களோடு தொடங்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 2018-ல் மாணவர்களின்றி மூடப்பட்டது. இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழில் அதே ஆண்டு வெளியான செய்தியைத் தொடர்ந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதோடு, ஒற்றை இலக்கத்தில் மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். எனினும், பள்ளிப் பராமரிப்பு மற்றும் கற்பித்தல் பணி முறையாக நடைபெறாததால் மீண்டும் மாணவர்களில்லாத சூழல் ஏற்பட்டது.

மாணவர்களைச் சேர்த்து பள்ளியைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அருகேயுள்ள முன்மாதிரிப் பள்ளியான பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி அண்மையில் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, அல்லம்பட்டி கிராமத்தினரிடம் பல முறை ஜோதிமணி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பள்ளியைப் புனரமைத்து வர்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து 5 மாணவர்கள் இன்று சேர்க்கப்பட்டனர். பள்ளியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி இன்று ஆய்வு செய்ததோடு, பள்ளியை முறையாக நடத்துமாறு ஆசிரியருக்கு அறிவுறுத்தினார். பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொண்ட பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி, துணைத் தலைவர் சேகர் மற்றும் பெற்றோர்களை அவர் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூலகம் அமைப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட குளத்தூர் மற்றும் சின்னப்பட்டமங்கலம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகள் அடுத்த சில நாட்களிலேயே திறக்கப்பட்டதோடு, அல்லம்பட்டி பள்ளியும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் எந்த ஒரு அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in