

கோவையில் தலைமறைவாக இருந்து, சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தவர் இலங்கை தாதா அங்கட லக்கா தான் என டி.என்.ஏ ஆய்வில் உறுதி ஆனது.
கோவை பீளமேட்டில் இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா அங்கட லக்கா (36), கடந்த ஜூலை 3-ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
உயிரிழந்தது அங்கட லக்கா தானா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இலங்கை அரசின் உதவியுடன் இலங்கையில் உள்ள அங்கட லக்காவின் மரபணுக்கள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. அதிலிருந்து மாதிரியுடன், கோவையில் இறந்த அங்கட லக்கா என சந்தேகிக்கப்பட்ட நபரின் மரபணு மாதிரி ஒப்பிட்டுப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் இரண்டு மாதிரிகளும் பொருந்திப் போயின. இதனால், கோவையில் தலைமறைவாக இருந்து, சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தவர் இலங்கை தாதா அங்கட லக்கா தான் என்பது உறுதியாகியுள்ளது.