

திமுக அரசின் நிர்வாகத்திறமையின்மையால் தான் சென்னை மழை வெள்ள பிரச்சினையை மக்கள் சந்தித்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டிள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டை யில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உணவு வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, அதுபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் ஏறக்குறைய ரூ.1,800 கோடியில் திட்டங்களைக் கொண்டு வந்ததுடன், மழைநீர் செல்லக்கூடிய வகையில் எல்லா வழிகளையும் நாங்கள் ஏற்படுத்தினோம்.
2015-ம் ஆண்டு 3500-க்கும் மேற்பட்ட மழைநீர் தேங்கும் இடங்களைகண்டறிந்தோம். அதன் அடிப்படையில் நாங்கள் இந்த எண்ணிக்கையை 68 இடமாகக் குறைத்தோம்.ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ஒழுங்காக பராமரிப்பு செய்திருந்தால், அந்த பழைய நிலைமைக்கு போயிருக்க வாய்ப்பில்லை. திமுக அரசின் நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தினால் சென்னை மக்களும், புறநகர் மக்களும் அவதிப்படுகின்றனர்.கொளத்தூர் தொகுதியிலேயே பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
திருப்புகழ் கமிட்டி போட்டு இனிமேல்தான் ஆராய்ச்சி செய்யப்போகின்றனர். இதனை 4 மாதத்துக்கு முன்னே செய்திருக்க வேண்டும். எங்கள் மீது திமுகவினர் குறை சொல்வதே வாடிக்கையாகிவிட்டது. விளம்பரத்தின் மூலம் எதுவும் செய்துவிடலாம் என்றுஇருக்கின்றனர். இது நடக்காத காரியம்.
இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு ஆட்சி அதிருப்தியை சம்பாதித்த வரலாறு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களை சமுதாயக் கூடங்களில் தங்கவைக்க ஏற்பாடுசெய்யவில்லை. சாப்பாடு போட வில்லை. இவை அனைத்தும் செய்ய வேண்டியதுதான் அரசின் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.