

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க பொறியியல் பட்டதாரி ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு ஒரே சமயத்தில் 9 ரகங்களை நடவு செய்து சாதனை படைத்துள்ளார்.
காரைக்குடி அருகே ஓ.சிறுவயலைச் சேர்ந்தவர் முகேஷ் கண்ணன்(28). பொறியியல் பட்டதாரி. இவர்சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிந்தார். பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருவதை அறிந்த அவர், அவற்றை மீட்கவும், இளைஞர்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தவும் முடிவு செய்தார்.
இதற்காக வேலையை விட்டுவிட்டு கடந்த ஆண்டு சொந்த ஊரான ஓ.சிறுவயலுக்கு வந்தார். அங்கு அவருக்கு சொந்தமாக 40 சென்ட் நிலமே இருந்தது. அதுவும் தரிசாகக் கிடந்தது. இதையடுத்து அருகே உள்ள நிலங்களில் 5 ஏக்கர் வரை குத்தகைக்கு எடுத்தார்.
கடந்த ஆண்டு இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்புகவுனி, செம்புலி சம்பா, குடவாழை பயிரிட்டார்.
இந்நிலையில், தற்போது ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட பராம்பரிய அழியும் நிலையில் உள்ள பயிர் ரகங்களான மிளகு சம்பா, கருப்பு கவுனி, செம்புலி சம்பா, அறுபதாம் குறுவை, கருத்தக்கார், சின்னார், சீரக சம்பா, கல்லுருண்டை, குல்லக்கார் ஆகிய 9 ரகங்களை ஒரே சமயத்தில் நடவு செய்துள்ளார். மேலும் பாரம்பரிய நெல் சாகுபடி போட்டியிலும் பங்கேற்று, தனியாக 50 சென்டில் மிளகு சம்பாவை ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்தார்.
இதுகுறித்து முகேஷ் கண்ணன் கூறியதாவது: ‘‘கடந்த ஆண்டு இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரக விதைகளை இயற்கை விவசாயத்துக்கு மாறவிரும்பிய 13 பேருக்கு வழங்கினேன். தற்போது வெள்ளத்தால் பல இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் புயல், வெள்ளம், வறட்சியைத் தாங்க கூடியது. நெல் பயிர் 3 அடி முதல் 7 அடி வரை வளரும். இயற்கை விவசாயத்தில் முதலில் பெரிய அளவில் லாபம் இருக்காது. 3 ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். பாரம்பரிய விவசாய மாநில விருதுக்கு விண் ணப்பித்துள்ளேன்’' என்றார்.