Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவது இனி காலத்தின் கட்டாயம்: பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி?- பேரிடர் மற்றும் மேலாண்மை வல்லுநர்கள் ஆலோசனை

சென்னை

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மரபுசாரா எரிசக்தி, சுரங்க நீர் தேக்கம், நீர்வழி போக்குவரத்து போன்ற தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்துவது காலத்தின் கட்டாயம் என பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளில் தொழிற்சாலைகள், வாகனங்கள் அதிகரிப்பு, காடுகளின் நிலப்பரப்பு குறைந்து வருவது போன்றவற்றால் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதனால், அதீத வானிலை மாற்றம், துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்டவை ஏற்பட்டு வருகின்றன.

நம் நாட்டில் முன்பெல்லாம் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அதீத கனமழை பெய்யும். ஆனால், இந்த நிலை தற்போதுமாறிவிட்டது. அதன்படி, சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் கனமழை பெய்வதும், ஏரியைப் போல் மழைநீர் தேங்குவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

சென்னையில் கடந்த 2015-ல் நிகழ்ந்தபெருவெள்ளத்துக்குப் பிறகு, தற்போதுமீண்டும் இந்த ஆண்டில் கனமழை பெய்துவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு பருவநிலை மாற்றம்தான் முக்கியகாரணமாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதீதகனமழை பெய்து, மோசமான வெள்ளங்கள், கடும் வெப்பநிலை, பலத்த காற்றுபோன்ற இயற்கை பேரிடர்கள் அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, மரபுசாரா எரிசக்தி, சுரங்க நீர்தேக்கம், நீர்வழிப் போக்குவரத்து போன்ற தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பேரிடர்மற்றும் மேலாண்மைத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:

கரியமில வாயுவை குறைத்தல்

மக்கள் தங்களது தேவையின் காரணமாக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். இதனால், மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள் தொகை, வாகனபெருக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளும் அதிகரித்து வருகின்றன.

எனவே, கரியமில வாயுவைக் குறைக்க தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். காற்றாலை, சோலார், கடலோர காற்றாலை, நீர் மின்உற்பத்தி மின்திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி, அனல் மின்உற்பத்தியை படிபடியாகக் குறைக்க வேண்டும்.அதுபோல், பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைந்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

இதெல்லாம் ஒரே ஆண்டில் செயல்படுத்த முடியாது. இந்த திட்டங்களை தொலைநோக்குத் திட்டங்களாக அறிவித்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவுக்காவது குறைக்க முடியும். அதுபோல், பருவமழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் சென்னையில் பள்ளமான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தேங்கும் மழைநீரை அகற்ற முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை புறநகர் பகுதிகளில் மேடானபகுதியைத் தேர்வு செய்து, அடிப்படை வசதிகளுடன் தற்காலிக முகாம்களை அமைத்து கொள்ளலாம். மேலும், ஜப்பானில் அமைத்திருப்பது போல் சுரங்க நீர்தேக்கங்களை அமைக்கலாம். இதன்மூலம், மழைக் காலம் இல்லாத நாட்களில் இந்த நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைத் துறையின் இயக்குநர் வி.மாதவ சுரேஷ் கூறியதாவது:

நீர்வழிப் போக்குவரத்து திட்டம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளின் உயரம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் தாழ்வானதாக மாறி வருவதால், மழைநீர் அதிக அளவில் தேங்குகின்றது. சென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதற்கு 15 சதவீதம் இதுவே காரணமாக இருக்கிறது. அதுபோல், சென்னையில் இருக்கும் மழைநீர் கால்வாய்கள் மிகவும்குறைந்த அடி ஆழத்தில் உள்ளன. இதைமாற்றியமைத்து பெரிய அளவிலான கால்வாய்களை அமைத்து, அருகேயுள்ள நீரோடைகளை இணைக்கும் வகையில் மேம்படுத்திட வேண்டும்.

நீரோடை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னையில் மக்கள் தொகைஅதிகரிப்பைத் தவிர்க்கும் வகையில் இரண்டாம் நிலையில் இருக்கும் நகரங்களை மேம்படுத்தி அங்கு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

சென்னையில் பாயும் கூவம் ஆற்றில், ஒரு காலத்தில் தூய நீர் ஓடியது. இந்த ஆற்றில் மீன் பிடிப்பும், படகு போட்டியும் நடைபெற்றன. தற்போது இந்த ஆற்றின்நிலமை கவலைக்குரியதாக உள்ளது. இந்த நிலையை மாற்றி, கூவம் ஆற்றைச்சீரமைத்து, மேம்படுத்திட வேண்டும். அதுபோல், கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற வாய்ப்புள்ள பகுதிகளில் நீர்வழி போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தினால், வாகனங்களால் ஏற்படும் மாசுவைக் குறைத்து புதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x