

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சி.விஜயபாஸ்கரிடம் இருந்த அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி நேற்று பறிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அதிமுக-வைச் சேர்ந்த இவர், கடந்த 2001-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியிலும், 2011-ல் விராலிமலை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதில், கடந்த 2011-க்குப் பிறகு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. அதன் பின்னர், 2013-ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்ததற்காக அமைச்சர் விஜய பாஸ்கரை மக்கள் பாராட்டி வந்தாலும், உட்கட்சி மோதல் அந்தக் கட்சியினரை அதிருப்தி அடையச் செய்தது. இதற்கு அதிமுவினர் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.
விழாக்களில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சரான (ஆதிதிராவிடர் நலத்துறை) ந.சுப்பிரமணியன் இருந்தாலும் தன்னையே முன்னிலைப் படுத்திக் கொள்வார், ஏனைய எம்எல்ஏ-க்களை அனுசரித்துச் செல்வதில்லை என்று கூறப் படுகிறது.
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான கங்கையம்மாள் மற்றும் அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோரை கடந்த ஆண்டு அவதூறாகப் பேசியதாக அமைச்சரைக் கண்டித்து அவரது உறவினர்களான முத்தரையர் சமூகத்தினர் புதுக்கோட்டையில் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னமும் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
உளவுத்துறை தகவல்
இதனால் தேர்தலில் புதுக் கோட்டை மாவட்டத்தில் அதிமுக வுக்கான வாக்கு சரியக்கூடுமென உளவுப் பிரிவு மூலம் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், அரசு கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதில் மற்ற குவாரிகளுக்கு பகிர்ந்தளிக் காமல் அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களின் குவாரிகளில் இருந்துதான் வாங்க வேண்டுமென நிர்ப்பந்தித்தார் என்று கூறப்படுகிறது. அரசு ஒப்பந்தங்களை இவரே ஆள் நியமித்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
தனது உறவினரின் கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி கிடைத்ததால் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை அமைச்சர் பகைத்துக் கொள்வதில்லையென்றும், சில நேரங்களில் தொகை பரிமாற்றம் நடந்துள்ளது எனவும் கூறப் படுகிறது.
மேலும், அதிமுகவில் மன்னார் குடியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களையும் புறக்கணித்து வந்தாராம். இதுகுறித்து ஆலங் குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய கூட்டமும் நடந்ததாம். இதன் விளைவாக அமைச்சர் பதவி என்பது அதிகபட்சமாக ஒரு மாதமே என்பதால் அதில் கைவைக்காமல், கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியான விளைவுகள் தேர்தல் நேரத்தில் எதிரொலிக்க உள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.