

விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் காஸ் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி வந்தது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, இத்திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதன்பின், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் பகுதியில் ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ.50 லட்சம் செலவில் தயாரிக்க, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம்(MSME Trade and Investment Promotion Bureau - MTIPB) கடந்த அக்டோபர் இறுதியில் ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைக்க பல்வேறு விவசாய சங்கங்கள், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்திட்டத்தை கைவிடக் கோரி நாகையில் இன்று (நவ.16) உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இதுகுறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்திருந்தார். இதனால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப் பெறுவதாகவும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, ‘‘விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது’’ என்றார்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘தமிழக அரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றார்.