

பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு குறித்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் குழு இன்று வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதத்தை கணக்கிட்டு அறிக்கை அளிக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.
இக்குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், கடந்த 13-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர்கள் குழு அறிக்கை முழுமையாக கிடைத்ததும் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு தொடர்பான விரிவான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் குழு இன்று அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் மாவட்ட வாரியாக, பயிர் சேதங்கள், கால்நடை பாதிப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.