Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

தொடர் கனமழையால் கடுமையான பாதிப்பு; கன்னியாகுமரியில் முதல்வர் ஆய்வு: சீரமைப்புக்கு ரூ.300 கோடி ஒதுக்க விவசாயிகள் கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தோவாளையில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.படம்: மு.லெட்சுமி அருண்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உதத்ரவிட்டார்.

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்க வேண்டும் என்று முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குளங்கள், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பல கிராமங்கள் தீவுபோல காட்சி அளித்தன. பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களிலும் அரிப்பு ஏற்பட்டு, பயிர்கள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து கம்பங்கள் சேதமடைந்ததால் மின்தடை ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின.

தோவாளை, குமாரபுரம், நித்திர விளை, கோதையாறு, மோதிரவிளை, குழித்துறை, தேரேகால்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் பலத்த சேதமடைந்தன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை சற்று ஓய்ந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.

முதல்வர் ஆய்வு

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த முதல்வர், அங்கிருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மதியம் 1 மணிக்கு வந்தார். முதலில் நாகர்கோவில் அருகே தோவாளையில் 28 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளத்தில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட்டார். உடைப்பை சரிசெய்யும் பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடிக்குமாறு உத்தரவிட்டார்.

தோவாளையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வடிவீஸ்வரம் பறக்கின்கால் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு, இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை முதல்வர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் வெள்ளத்தால் உடைந்த நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயை பார்வையிட்ட முதல்வர், கால்வாய் உடைப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தேரேகால்புதூர் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட கால்வாய் மற்றும் சேதமடைந்த சாலைகளையும், குமாரகோவிலில் பிபி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பையும் பார்வையிட்டார். அங்கு மழை நீர் சூழ்ந்துள்ள வாழைத் தோட்டங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் முதல்வரிடம் ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டன. மாவட்டத்தில் வெள்ளச் சேதங்களை நிரந்தரமாக தடுப்பதற்கும், உடைப்பு ஏற்பட்ட கால்வாய்களை சீரமைக்கவும் ரூ.300 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்களிடம் முதல்வர் உறுதி அளித்தார். முதல்வர் ஆய்வின்போது சில இடங்களில் மழை பெய்தது.

இந்த ஆய்வுக்குப் பிறகு நாகர்கோவிலில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதை சீர்செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

நோய் தொற்று ஏற்படாத வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுகாதாரத்தை காக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறைபாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தினார்.

ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மூர்த்தி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் எம்.ஆர்.காந்தி, தளவாய்சுந்தரம், ரூபி மனோகரன், பிரின்ஸ், ராஜேஷ்குமார், டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுமார் 3 மணி நேரம் வெள்ள சேதங்களை ஆய்வு செய்த முதல்வர், மாலை 4 மணிக்கு காரில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x