

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் பிடிபட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு 14-ம் தேதி மாலைஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசிக்கும் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து, உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவை சேர்ந்த போலீஸார் விஜய் வீட்டுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் சோதனை நடத்தியும், அங்கு வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வதந்தி பரப்பும் நோக்கில் மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
இதில், மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (37) என்பதும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக ஏற்கெனவே பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அவரை எச்சரித்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.