

‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வன்னியர் சங்கத் தலைவரான பு.தா.அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, ‘ஜெய் பீம்’ படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், அமேசான் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
நடிகர் சூர்யா நடித்து கடந்த நவ.2-ம் தேதி வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சங்கம் மற்றும் அதன் தலைவராக இருந்து மறைந்த குரு ஆகியோரை குறிக்கும் வகையில் காட்சிகள், கதாபாத்திரங்களை அமைத்து வன்னியர் சமுதாயத்துக்கு எதிராக அவதூறு பரப்பியுள்ளனர்.
அந்த படமும், கதாபாத்திரங்களும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை என்று கூறும்போது காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமியின் பெயரை குருமூர்த்தி என மாற்றியிருப்பதும், உதவி ஆய்வாளரின் பின்னணியில் எங்களது சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை காட்டியிருப்பதும் திட்டமிட்டு படமாக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.
படக்குழுவின் இந்த செயல் அறியாமல் நடந்துவிட்டதாகக் கூறி, அக்னி குண்டம் காட்சிகளை நீக்கிவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.
உள்நோக்கத்துடன் படமாக்கப்பட்டுள்ள இந்த காட்சிகளை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ள நிலையில் எங்களது வன்னியர் சங்கத்துக்கும், வன்னியர் சங்கத் தலைவராக இருந்த குருவின் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.
எனவே, இதற்காக ‘ஜெய் பீம்’படக்குழு 24 மணி நேரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன், 7 நாட்களில் ரூ.5 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும்.
மேலும், அக்னி குண்டம் தொடர்பான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ‘ஜெய் பீம்’ படக்குழு மற்றும் அதன் தயாரி்ப்பாளர், இயக்குநருக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கும், இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கும் தொடரப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.