

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டாபகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து இன்று (நவ.16) பார்வையிட உள்ளதாக சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஊராட்சிஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளாளபுரம் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரி நீர் அருகேயுள்ள அருந்ததியர் காலனியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்களை அதிகாரிகள் வெள்ளாளபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஏரி நீர் சூழ்ந்தபகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி நேற்று பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட 160 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: பருவமழைக்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வாரும் பணியை அரசுசரியான நேரத்தில் திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. இதனால், தற்போது மழையால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இன்று (நவ.16) நானும், அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்டா பகுதிகளை பார்வையிட உள்ளோம். தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு கேட்டால் மழை பாதிப்பு தொடர்பாக நாங்களும் தெரிவிப்போம். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் 60 சதவீதம் முடிந்துள்ளது. ஆனால், திமுக அரசு அப்பணிகளில் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது.
வெள்ளநீர் தேங்கி மக்கள்பாதிக்கப்படுவதாக கூறினால், மறுப்பு தெரிவிக்க இயலாமல் முதல்வர் ஸ்டாலின் மிரட்டுகிறார். மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல விசாரணை கமிஷன் என்று கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் 16-ம் தேதி (இன்று) ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கஉள்ளனர். 5 மாவட்டங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு செய்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.