Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூரில் ரூ.1.1 கோடியில் உணவு அருங்காட்சியகம்: மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் காணொலி மூலம் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் இந்திய உணவு கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற உணவு அருங்காட்சியகம் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் காணொலி மூலம் திறந்து வைத்த கல்வெட்டுடன், நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய உணவுக் கழக தென்மண்டல செயல் இயக்குநர் டல்ஜித் சிங் உள்ளிட்டோர்.

தஞ்சாவூர்

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய உணவுக் கழகம்சார்பில் தஞ்சாவூரில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இந்திய உணவுக் கழகம் தஞ்சாவூரில் 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் நிர்மலா நகரில் உள்ள இந்நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் உணவு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 2,500 சதுரஅடி பரப்பளவில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

பெங்களூருவில் உள்ளவிஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பஅருங்காட்சியகத்தின் உதவியுடன், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவுக்காக எப்படி வேட்டையாட தொடங்கினான் என்பதில் தொடங்கி, உழவு கருவிகள், விவசாயம், உலகில் உள்ள தானிய களஞ்சியங்கள், உலகளவில் உணவு உற்பத்தியின் சவால்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், இந்தியாவில் உள்ள உணவு முறைகள், பொதுவிநியோகத் திட்டம், விவசாயத்தில் உழவுப்பணி, நாற்றங்கால், நடவு, களை எடுப்பு, அறுவடை, கொள்முதல், அரைவை, மக்களுக்கு அரிசிவிநியோகம் வரை உள்ள பணிகள் மெழுகு பொம்மைகளாகதத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை நேற்று பொதுமக்கள் பார்வைக்காக மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஸ்கோயல் மும்பையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, "இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் அமைக்கஏற்பாடுகளை செய்த இந்திய உணவுக் கழகத்தினருக்கு பாராட்டுகள். இறக்குமதியாளர் முதல் ஏற்றுமதியாளர் வரை உணவுப் பாதுகாப்பின் மூலம் தேசத்தில் விவசாயப் புரட்சியை இந்திய உணவு கழகம் ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தில் ஏழைகள் மற்றும் சலுகைகள் கிடைக்காத பிற பிரிவினருக்கு இந்திய உணவுக் கழகம் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதையடுத்து, தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்மண்டல செயல் இயக்குநர் டல்ஜித்சிங், முதன்மைப் பொது மேலாளர் சஞ்சீவ்குமார் கவுதம், தமிழக பொது மேலாளர் பி.என்.சிங், தஞ்சாவூர் மண்டல மேலாளர் தேவேந்திர சிங் மார்டோலியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த அருங்காட்சியகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகம் ப்ரொஜெக்ஷன் மேப்பிங், டச் ஸ்கிரீன் கியோஸ்க், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும், இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x