

உடுமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட டிஜிட்டல் நூலகத்தில் மீண்டும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள முதல்நிலை நூலகத்தில் 2018-ல் ரூ.50 லட்சம் செலவில்டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்பட்டது. போதிய நிதி ஒதுக்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதன் பின்னர், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரத்தின் முயற்சியால் டிஜிட்டல்நூலகத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் டிஜிட்டல் நூலகத்திறப்பு விழா நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இதில் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், போட்டித் தேர்வு நூல்கள்பிரிவு, இணைய தள பிரிவு ஆகியவற்றை தனித்தனியே திறந்து வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
புத்தகத்தை படிப்பது உலகத்தை படிப்பதற்கு சமம் என்ற சொல்லுக்கு இணங்க முன் மாதிரி நூலகமாக உடுமலை கிளை நூலகம் இயங்கி வருகிறது. 17,000ஆக உள்ள உறுப்பினர் எண்ணிக்கை விரைவில் 50,000 ஆக மாற வேண்டும். போதிய நிதி வசதி இல்லாததால் தடைபட்டுள்ள போட்டித் தேர்வுவகுப்புகள், மீண்டும் செயல்படும். அதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் செய்து தருவார்.
பல்வேறு வசதிகளுடன் கூடிய மாதிரி டிஜிட்டல் நூலகத்தை உடுமலை சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மாணவன் படிப்பதால் அவன் மட்டுமே முன்னேற முடியும், ஒரு பெண் படிப்பதால் ஒரு சமூகமே முன்னேறும். மாணவ, மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். கல்வியினால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, ‘‘நூலகங்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே இயங்கி வருகின்றன. உடுமலை நூலகம் முன் மாதிரியாக செயல்பட்டு வருவது மாவட்டத்துக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது,’’ என்றார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசும்போது, ‘‘உடுமலை மாதிரி நூலகம் போல மாநிலத்தில் 3 மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்து நூலகங்களிலும் போட்டித் தேர்வு பயிற்சிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாவட்ட நூலகர் மணிகண்டன், நூலகர் பீர்பாட்ஷா, வாசகர் வட்ட தலைவர் லெனின்பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சின்னவீரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 630 மாணவ, மாணவிகளுடன் பள்ளி சிறப்பாக இயங்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்துக்கான காசோலையை பள்ளி ஆசிரியர்கள் அமைச்சரிடம் வழங்கினர். விரைவில் அங்கு ரூ.39 லட்சம்மதிப்பில் 8 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டி தரப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குசென்ற கல்வி அமைச்சர் அங்குமாணவிகளிடம் கலந்துரையாடினார். அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். நூலக திறப்பு விழா நிறைவடைந்த பின் அமராவதி நகரில் உள்ள ராணுவ பள்ளியில்(சைனிக்) ஆய்வு மேற்கொண்டார்.