

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டு சர்வதேச கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியா உட்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 9 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி பயில்கின்றனர். இதில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தோராயமாக 20 சதவீதம். 2020-2021-ம் கல்வி ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 67,582 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள். வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் முதல் தேர்வாக அமெரிக்கா இருக்கிறது.
கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று சூழலில் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்க அரசும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. எந்த வகையிலும் படிப்பு பாதிக்காமல் இருக்க இணையவழி உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் அதுதொடர்பான அனைத்து தகவல்களையும் உதவிகளையும் பெறுவதற்கு Education USA India என்ற மொபைல் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலி மூலம் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.