

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 12-ம் தேதி முதல் பெருமழையாக பெய்தது. அணைகள் நிரம்பியதால் உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டன. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழையாறு பாயும் கரைப்பகுதிகளில் உள்ள இறச்சகுளம், திருப்பதி சாரம், வீரநாராயணமங்கலம், வடசேரி, ஒழுகினசேரி, சுசீந்திரம் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
திற்பரப்பு, களியல், திருவட்டாறு, குலசேகரம், வைக்கலூர், சேனம்விளை, நித்திரைவிளை, கருங்கல், கிள்ளியூர், முஞ்சிறைபகுதிகளில் உள்ள கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணையின் மறுகால் ஓடையில் ஏற்பட்ட உடைப்பால் தோவாளை, செண்பகராமன்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்கள் தண்ணீரில் மிதந்தன. தோவாளை பெரியகுளம், திருப்பதிசாரம், தேரேகால்புதூர், குமாரகோயில் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டது.
4,200 பேர் மீட்பு
மாவட்டம் முழுவதும் 250-க்கும்மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவித்தனர். இவர்களை தீயணைப்பு மீட்புத்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீஸார், வருவாய்த்துறையினர் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். இதுவரை 4,200-க்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மழையின் வேகம் சற்று குறைந்திருப்பதால் ஒழுகினசேரி பாலம், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக போக்குவரத்து நடந்தது.
மிகவும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் இதுவரை வடியவில்லை. வில்லுக்குறி இரட்டைகரை கால்வாய் உடைப்பிலிருந்து வெளியேறும் தண்ணீரால் பேயன்குழி, நுள்ளிவிளை பகுதியில் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரணியல், குழித்துறை, கேரள மாநிலம் பாறசாலை பகுதிகளில் தண்டவாளத்தை மூடிய மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தண்டவாள பாதைகள் முழுமையாக சீரமைக்கப்படாததால் நாகர்கோவிலில் இருந்துதிருவனந்தபுரத்துக்கு 3-வது நாளாக நேற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மழை அளவு
நேற்று காலை வரை களியலில் 100 மிமீ மழை பதிவாகியிருந்தது. சிற்றாறு ஒன்றில் 62 மிமீ, கன்னிமாரில் 33, குழித்துறையில் 43, பேச்சிப்பாறையில் 68, பெருஞ்சாணியில் 72, புத்தன்அணையில் 78, சிவலோகத்தில் 71, சுருளகோட்டில் 73, பாலமோரில் 86, மாம்பழத்துறையாறு, பொய்கையில் தலா 40, கோழிப்போர்விளையில் 24, அடையாமடையில் 41, முள்ளங்கினாவிளையில் 47, ஆனைக்கிடங்கில் 35, முக்கடல் அணையில் 29, லோயர் கோதையாரில் 24 மிமீமழை பெய்திருந்தது.
மாவட்டம் முழுவதும் சராசரி மழை அளவு 44 மிமீ ஆகும். கடந்த 4 நாட்களில் இம்மாவட்டத்தில் இதுவே குறைந்த மழை விகிதமாக உள்ளது.
மழை குறைந்திருந்தாலும் மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. பேச்சிப்பாறை அணை 45 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நேற்று6,037 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 6,239 கனஅடிதண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 5,688 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 6,019 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு நீடிப்பு
அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேறி வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு, கோதையாறு, வள்ளியாறில் நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. நெல் வயல்கள், ரப்பர், தென்னை, வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 1,500 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துவிட்டன.
கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.61 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்பாதைகள் சேதமடைந்துள்ளன. பழுதான 467 மின்மாற்றிகளில் 383 மின்மாற்றிகள் சரிசெய்யப்பட்டுள்ளன. 100-க்கும்மேற்பட்ட பழுதான மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட 120-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேற்று மின்விநியோகம் சீரானது. 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலுக்கு பின்னர் அதிக சேதத்தை ஏற்படுத்திய மழை வெள்ள பாதிப்பாக இது உள்ளது.