

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சோழிங்கநல்லூரில் மூன்று துணை மின் நிலையங்களையும், புறநகர்ப்பகுதிகளில் கூடுதல் மின் பாதைகளை அமைக்கவும் மின் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவையும் இதே வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால் மின்சாரத் தேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு, 2,550 மெகாவாட்டாக இருந்த சென்னையின் மின்சாரத் தேவை, தற்போது 3,700 மெகாவாட்டை நெருங்கியுள்ளது.
சென்னைக்கான மின்சாரம் வடசென்னை, எண்ணூர், வல்லூர் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், மின் தொகுப்பு வழியாகவும் பெறப்படுகிறது. இதில் தற்போது வடசென்னை விரிவாக்கத்தில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட், வல்லூரில் இதுவரை உற்பத்தியைத் தொடங்கியுள்ள இரண்டு அலகுகளில் தலா 500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கிறது. வல்லூரில் மூன்றாம் அலகில் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.
ஆனால், இந்த புதிய மின் நிலையங்களிலிருந்து வரும் கூடுதல் மின்சாரத்தை, மின் தொகுப்புக்கு கொண்டு செல்லவும், பின்னர் துணை மின் நிலையங்கள் வழியே விநியோகம் செய்யவும் தொழில்நுட்ப ரீதியான உள்கட்டமைப்பு வசதி பற்றாக்குறையாக உள்ளது.
இதைத் தொடர்ந்து தேசிய மின் தொடரமைப்புக் கழக அதிகாரிகளின் ஆலோசனையுடன், புதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தமிழக மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
தற்போது வெளிமாநிலங்களிலிருந்து வரும் மின்சாரம் மற்றும் புதிய மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, உரிய வகையில் பயன்படுத்த, ஐந்து இடங்களில் மின் தொடர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் சோழிங்கநல்லூரில் ஏற்கனவே 500 எம்விஏ திறனில் இரண்டு துணை மின் நிலையங்களை அமைக்க முடிவானது.
ஆனால் இத்திட்டத்தை மாற்றி, 315 எம்விஏ திறனில் மூன்று துணை மின் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல், சோழிங்கநல்லூர், கிண்டி, மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையில், கூடுதல் மின் பாதைகள் அமைப்பது குறித்து முதற்கட்ட திட்டமிடல் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை இன்னும் ஓராண்டில் நிறைவு செய்தால், சென்னையின் மின் விநியோகத்தில் பிரச்சினை இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.