

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலருக்கு பிரசித்திபெற்ற தோவாளையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வெள்ளம் ஊருக்குள் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலுக்கு பின்னர் தற்போது கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயலின்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பாடம் கற்காத நிலையில் மீண்டும்ஒரு சேதத்தை மாவட்டம் சந்தித்திருக்கிறது. நீர்நிலைகள், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளே இதற்குமுக்கிய காரணம் என்பது வெளிச்சமாகியுள்ளது.
தோவாளையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும்போது இதை நன்றாக உணர முடியும். இங்குள்ள 28 ஏக்கர் பரப்பள கொண்ட பெரியகுளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்ட கால்வாய் வழிநெடுகிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளும், கட்டிடங்களும், கடைகளும் கட்டப்பட்டுள்ளன.
பல வீடுகளின் கழிவறைகளில் இருந்து கழிவுகள் கால்வாயில் சேரும் வகையில் குழாய்கள் காணப்படுகின்றன. மலர் சந்தைக்கு பிரசித்தி பெற்ற இப்பகுதியிலுள்ள வியாபாரிகள் மலர் கழிவுகளை இக்கால்வாயில் கொட்டுகிறார்கள். இங்குள்ள அரசுப்பள்ளி அருகே விரிந்து காணப்படும் கால்வாய் படிப்படியாக சுருங்கி சிற் றோடை போல் காட்சியளிக்கிறது.
கால்வாயில் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி நீரோட்டத்தை தடுக்கிறது. இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது.
நாகர்கோவில்- திருநெல்வேலி பிரதான சாலையையொட்டி இருபுறமும் செல்லும் இக்கால்வாய் பெரும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதால் பெருமழையின் போது பாதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சேர்மன் (70) என்பவர் கூறும்போது, ‘‘தோவாளை பகுதியில் 2,500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1992ல் ஏற்பட்ட புயல்வெள்ளத்தின்போதுதான் இத்தகைய பாதிப்பு நிகழ்ந்திருந்தது. ஆனால், ஒக்கி புயலின்போது இத்தகைய சேதங்கள் ஏற்படவில்லை.
கால்வாய் ஆக்கிரமிப்பும், மலர்கழிவுகளை கொட்டுவதும் தீராதாபிரச்சினையாக உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் கழிவு மேலாண்மையை மேலும் சரிவர மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
குடிநீர் குழாய்களை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதால் கடந்த4 நாட்களாக குடிநீர் இல்லாமல்தவிக்கிறோம். மழை நீரை பிடித்துவைத்து பயன்படுத்துகிறோம். சீரமைப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.