

தி.மலை அருகே தேவரடியார்கள் கொடுத்த தான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திரு வண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
தி.மலை அடுத்த கீழ்நாத்தூர் கிராம புறவழிச்சாலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பலகை கல்வெட்டை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். அக்கல்வெட்டை படியெடுத்து கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால் ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் அவர், “தி.மலை மேலைத் தெருவில் வசித்த தேவரடி யார்கள், கரிகால சோழன் பெயரில் தங்களுக்கு ஜீவிதமாக விடப்பட்ட கரிகால சோழ நல்லூர் எனும் ஊரில் உள்ள கும்பனேரி என்ற பிரிவு முழுவதையும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், திருப்பணி மேற்கொள்ளும் பொறுப்பில் இருந்த உலகநாத தம்பிரானுக்கு அபிஷேக கட்டளைக்கு கொடுத்துள்ள செய்தியை கல்வெட்டு தெரிவிப்பதாக” கூறியுள்ளார்.
வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில், “தி.மலை கோயிலில் தேவரடியார்கள் இருந்தது பற்றியும், அவர்கள் வசித்த பகுதியான மேலைத்தெரு, கீழைத்தெரு பற்றி பல கல்வெட் டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோயிலில் பாடல் பாடவும் மற்றும் நடனத்துக்காக தங்களை அர்ப்பணித்து கொண்ட பெண்கள். இவர்கள் வாழ்வுக்கு ஜீவிதமாக கரிகால சோழ நல்லூர் என்ற ஊர் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். கரிகால சோழ நல்லூர் என பெயரிட்டு வழங்கியது சோழர் காலத்தில் நடைபெற்றிருக்கலாம்.
விஜயநகர ஆட்சி காலத்தில், திருவண்ணாமலை கோயிலில் நடைபெற்ற திருப்பணிக்காக, தங்களுக்கு வழங்கப்பட்ட ஊரையே, தானமாக வழங்கி இருப்பதை கல்வெட்டில் தெரியவருகிறது. கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே கீழ்நாத்தூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியே, கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள கும்பனேரியாக இருக்கலாம். கரிகால சோழ நல்லூர் என்ற இடம், தற்போதைய கீழ்நாத்தூர் ஏரியை ஒட்டி அமைந்துள்ள இடமாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.