

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நேசகுமார் (24). வண்டறந்தாங்கல் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்ற செந்தில்குமார் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த 10-ம் வீட்டில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்ப வில்லை.
இது தொடர்பான புகாரின்பேரில் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில், நேசகுமாரின் நண்பரான விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலா (25) என்பவரை சந்தேகத்தின்பேரில் நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தனர். அதில், தனதுநண்பர்கள் ஆகாஷ் (19), சரத் (19),சாண்டில்யன், நவீன்குமார், சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து விருதம்பட்டு மயானத்தில் மதுபானம் அருந்த வந்த நேசகுமார், அவரது நண்பர் விஜய் ஆகியோரை கொலைசெய்து இருவரின் உடலையும் கல்லைக்கட்டி பாலாற்றில் வீசியதாக கூறியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த ஆகஸ்ட் மாதம் வேப்பங்குப்பம் அருகேயுள்ள ஓங்கப்பாடியில் தனியார் நூற்பாலை தொழிலாளி கடத்தல் வழக்கில் கைதான கவுதம் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், நேசகுமாருக்கும் ஊருக்குள் யார் பெரிய ரவுடி என்பதில் பிரச்சினை இருந்துள்ளது. ஆள் கடத்தல் வழக்கில் கைதான கவுதமை சிறையில் இருந்து வெளியே வந்ததும் கொலை செய்யப்போவதாக கூறி வந்துள்ளார்.
இந்த தகவல் எனக்கு தெரிய வந்ததும் நெருங்கிய நண்பர் கவுதமை காப்பாற்ற நேசகுமாரை கொலை செய்ய திட்டமிட்டோம். நானும் அவருக்கு நண்பர் என்பதால் நேசகுமாரை மதுபானம் குடிக்கவரவழைத்தோம்.அப்போது, விஜய்யுடன் வந்தவருக்கு மதுபானம் குடிக்க வைத்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளார்.
அவர் கூறிய தகவலின்பேரில், ஆகாஷ் மற்றும் சரத் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள சாண்டில்யன், நவீன்குமார், சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும், இருவரின் உடலை எங்கே வீசப்பட்டது என்பது குறித்தும், உடலையும் மீட்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.