

தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாகப் பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் எண்ணை சரிபார்த்து பயன்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு அறிவிக்கை ஒன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக உடல் உறுப்பு தான ஆணையம் ட்ரான்ஸ்டான் தற்போது ஆதார் எண்ணை ஓர் அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்துகிறது. உறுப்பு கோரி விண்ணப்பிப்பதற்கும், ஆள் அடையாளத்தை சரிபார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும், உறுப்பு தானத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், உறுப்பு தானத்துக்கு தமிழகத்தில் ஆதாரைக் கட்டாயமாக்குகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஓர் மருத்துவமனையில் இருந்து மற்றோர் மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர் ஆதார் எண் அடிப்படையிலேயே அத்தகைய சேவைகளைப் பெறலாம். டிஜிட்டல் தளத்தில் ஆதார் எண் பதிவேற்றப்படுவதால் போலி ஆதார் எண்ணைக் கொடுத்து தானம் தருவதோ பெறுவதோ சாத்தியப்படாது.
ஒருவேளை ஏதேனும் ஒரு நபருக்கு ஆதார் எண் இல்லை என்றால், அவருக்கு ஆதார் எண் கிட்டும் வரை தொடர்பில்லா சேவைகள் வழங்க வேண்டும்.
உறுப்பு தானத்திலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் ஆதாரின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.