Published : 15 Nov 2021 04:55 PM
Last Updated : 15 Nov 2021 04:55 PM

காடு, கடல்களைப் பாதுகாக்காமல், வேளாண் சட்டத் திருத்தத்தைக் கைவிடாமல் பருவ நிலை மாற்றத்தைக் காண முடியாது: வேல்முருகன்

காடுகள், கடல்களைப் பாதுகாக்காமல், வேளாண் சட்டத் திருத்தத்தைக் கைவிடாமல், நிலக்கரிச் சுரண்டலை ஒழிக்காமல் பருவ நிலையில் மாற்றத்தைக் காண முடியாது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''உலக மயமாக்கலுக்குப் பிறகு, உலகம் முழுக்கத் தொழிற்சாலைகளிருந்து வெளிவரும் கரியமில வாயு, கார்பன் வாயு அதிகரிப்பு, காடுகள் அழிப்பு, கடல் மாசுபாடு, இயற்கை வளச் சுரண்டல், நிலக்கரி சுரண்டல் ஆகியவை கார்ப்பரேட் நிறுவனங்களால் அன்றாடம் நடத்தப்பட்டு வரப்படுகின்றன. இது போதாதென்று, வளர்ச்சி என்ற பெயரில், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் வேறு. இப்படி, மோசமான இயற்கை வளச் சுரண்டலும், நாசகாரத் திட்டங்களுமே புவி வெப்பமயமாதல் அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.

இந்த நிலையில்தான், இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி, 12ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க, உலக நாடுகள் சேர்ந்து பாடுபட ஒப்புக் கொண்டுள்ளன.

2030க்குள் காடுகள் அழிப்பை நிறுத்தவும், காடு வளர்ப்பை மேற்கொள்ளவும் 100 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். 2030க்குள் பசுமை இல்ல வாயுவான மீத்தேன் உமிழ்வைக் குறைக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாகச் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவைத் தவிர, நிலக்கரிப் பயன்பாட்டில் இருந்து விலகிச் செல்ல 40 நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன. எண்ணெய், எரிவாயுப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும், புதிய எண்ணெய், எரிவாயு வளங்களைக் கண்டுபிடிக்கும் பணியை நிறுத்தவும், மாநாட்டில் சில நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், காடுகள் அழிப்பை நிறுத்துவதில், கடலைப் பாதுகாப்பதில், நிலக்கரிச் சுரண்டலைத் தடுப்பதில், மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் என்ன என்பது குறித்து விளக்க முடியுமா?

பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றிய சூழலில், இந்தியாவில் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் எனப் புகழப்படும் கடல்சார் வணிகத்தின் பொருளாதாரக் கோட்பாடு ஆகிய இரண்டையும் நிறைவேற்றுவதில், மத்திய அரசு வேகமாகச் செயலாற்றி வருகிறது.

வனப் பாதுகாப்புச் சட்டத்திருத்தம், கடல்சார் வணிகத்தின் பொருளாதாரக் கோட்பாடு, நாட்டின் காடுகளையும் கடல்களையும் அழித்துவிடும் என்ற புரிதல் மத்திய அரசுக்கு இல்லை. பாஜக அரசு, புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், கடல்மட்ட உயர்வு குறித்து எப்போதும் சிந்திக்காது, கவலைப்படாது.

எனவே, இயற்கை நமக்களித்த கொடை என்பதைப் புரிந்துகொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக இயங்கி வரும் பாஜக அரசின் திட்டங்களைக் கைவிட மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

புவி வெப்பமயமாகும் பிரச்சினையின் பின்னே உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியலை முறியடித்து, காடுகள், கடல்கள், வேளாண்மையைப் பாதுகாக்கத் தமிழர்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

காடுகள், கடல்களைப் பாதுகாக்காமல், வேளாண் சட்டத்திருத்தத்தைக் கைவிடாமல், நிலக்கரிச் சுரண்டலை ஒழிக்காமல், பருவநிலையில் மாற்றத்தைக் காண முடியாது என்ற உண்மையை மத்திய அரசுக்கு நாம் புரியவைக்கவும் உறுதியேற்க வேண்டும்.''

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x