

மது மற்றும் போதைப் பொருட்கள் மன அழுத்தங்களிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக நினைப்பது தவறானது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஜாமீன், முன்ஜாமீன் கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதி கூறியதாவது:
”மன அழுத்தம் மற்றும் பிற துன்பங்களிலிருந்து தப்பிக்க மது, போதைப் பொருட்கள் உட்கொள்வதுதான் சிறந்த வழி எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் அந்த மதுவும், போதைப் பொருட்களும் மோசமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
பலர் பரவசமான உணர்வு கிடைப்பதாகக் கூறி மது, போதைப் பொருட்களை உட்கொள்கின்றனர். இவை தற்காலிகமாக வலி நிறைந்த உணர்வுகளை மறைக்க உதவுகிறது.
இதனால் பலர் வலி உணர்வுகள், மோசமான நினைவுகள், குறைந்த தூக்கம், வெட்கம், அவமானம், கோபம் ஆகியவற்றைச் சமாளிக்க போதைப் பொருட்களை நாடுகின்றனர். இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் சுகமான உணர்வு தற்காலிகமானதுதான். உண்மையில் மது, போதைப் பொருட்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மது மற்றும் போதையால் நிதியிழப்பு, உறவுகள், தனி நலன் ஆகியவற்றைத் தியாகம் செய்ய வேண்டியது வரும். சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு தருவதாக மது, போதைப் பொருட்களை நாடுகின்றனர். ஆனால், அவர்கள் சொர்க்கம் என நினைப்பது நரகமாக மாறிவிடும். குற்றங்கள் அதிகரிக்கவும் மது, போதை காரணமாக இருக்கிறது. இளைஞர்கள் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதற்கு மதுவும், போதைப் பொருட்களும் ஒரு காரணமாக உள்ளன”.
இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
பின்னர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களைத் தகுதி அடிப்படையில் விசாரித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.