19 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

19 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக, வரும் நவம்பர் 18ஆம் தேதி, தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகப் பகுதிகளில் நிலவக்கூடும். மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நவ.15, நவ.16 ஆகிய தேதிகளில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

நவ.17, 18 ஆகிய தேதிகளில் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 17, 18 ஆகிய தினங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in