கோயில் நிதியில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிதியில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

கோயில் நிதியில் தொடங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகளைத் தவிர புதிதாகக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, ரூ.1,500 கோடி மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்துக் கோயில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சார்பில் பரமத்தி வேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் விளாத்திகுளத்திலும் என நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்துத் தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணைக்குத் தடை விதித்து ரத்து செய்யக் கோரியும், கோயில் சொத்துகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறைச் சட்டப்படி கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், கோயில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆயிரத்திற்கும் மேலான கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக சொத்து எதுவும் இல்லை என்றும், முதல்வர் தொகுதி என்ற காரணத்தினால் அங்கு அவசரமாகக் கல்லூரி தொடங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு ஆட்சேபங்களைப் பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்றும், கோயில் நிர்வாகத்தில் இருந்து எந்த விண்ணப்பமும் அளிக்கப்படாமல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும், கோயில் நிர்வாகங்களும் கல்லூரி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும், கோயில்களில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் கல்லூரிகள் அமைக்கப்படுவதாகவும், உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோயில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தைப் பின்பற்றியே தொடங்கப்படுவதாகவும், பல கோயில்களில் இருந்து பொது நிதிக்குப் பெறப்பட்ட பங்களிப்பு நிதியில் இருந்துதான் கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் எனத் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், கடந்த 11 ஆண்டுகளாக அறங்காவலர்கள் இல்லை எனவும், வழக்குத் தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். மேலும், எட்டுக் கல்லூரிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, கொளத்தூரில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோயில் நிதியைப் பயன்படுத்துவதால் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், சட்டப்படிதான் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடிப்படை நடைமுறைகளைப் பின்பற்றாமல் தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.

அதேசமயம், நான்கு கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் தொடங்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் தொடங்க வேண்டும் எனவும், கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 5 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in