Published : 15 Nov 2021 12:04 PM
Last Updated : 15 Nov 2021 12:04 PM

கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றமளிக்கிறது; புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்த விரைவாகச் செயல்படுக: அன்புமணி

கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றமளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

“புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் உறுதியான செயல்திட்டங்கள் எதுவும் இல்லாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உலகம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க ஒருங்கிணைந்து, விரைந்து செயல்பட வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் உணர வேண்டும்.

தொழிற்புரட்சி காலத்திற்கு முன் 14 டிகிரி செல்சியஸாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்கவும், முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அந்த இலக்குகளை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது காலநிலை மாற்ற மாநாட்டில் நிலக்கரிப் பயன்பாட்டை முற்றிலுமாகக் கைவிடுவது குறித்து உறுதியாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலகின் வளர்ந்த நாடுகளுக்கும், சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிலக்கரிப் பயன்பாட்டை 2030-க்குள் முழுமையாக கைவிடுவதற்கு பதிலாக குறைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு காலநிலைமாற்ற மாநாட்டில் முதன்முதலாக எடுக்கப்பட்டிருப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும் நிலக்கரிப் பயன்பாட்டை முற்றாகக் கைவிடுவதுதான் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை எட்டுவதற்கு உதவும்.

பூமியிலிருந்து கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவை 2010ஆம் ஆண்டில் இருந்ததை விட 2030ஆம் ஆண்டுக்குள் 45% குறைக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவையும், அவை அகற்றப்படும் அளவையும் 2050ஆம் ஆண்டுக்குள் சமமாக ஆக்க வேண்டும் (Net Zero) என்பதுதான் வரைவுத் தீர்மானத்தின் அடிப்படையாக இருந்தது. ஆனால், இந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மாறாக, 2030ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படவுள்ள புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்ற சுமார் 200 நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்கள்தான் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

புவி வெப்பநிலை உயர்வை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பாரீஸ் உடன்படிக்கையின் மையக்கரு ஆகும். அது சாத்தியம் இல்லாத பட்சத்தில் 2 டிகிரிக்குள்ளாக கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், உலக நாடுகள் இப்போது உறுதியளித்துள்ள செயல்திட்டங்களின்படி புவி வெப்பநிலை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும். இது பூவுலகைக் காப்பாற்றுவதற்கு எந்த வகையிலும் உதவாது.

புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால் நிலக்கரியின் பயன்பாடு 2030ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்காக உலக நாடுகள் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும். அதற்கான செலவை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளால் சமாளிக்க முடியாது என்பதால், நிலக்கரியைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் லாபம் அடைந்த நாடுகள் மானியமாக வழங்க வேண்டும் என்பதுதான் வளரும் நாடுகளின் கோரிக்கை ஆகும். உதாரணமாக நிலக்கரிப் பயன்பாட்டைக் கைவிடுவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக 2020-க்குள் வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி டாலர் வீதம் வழங்க 2009ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டன. ஆனால், அதைச் செயல்படுத்தவில்லை. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி டாலர், அதாவது சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்பது இந்திய அரசின் கோரிக்கை ஆகும். இவற்றைச் செயல்படுத்துவதில் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.

2030ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பைத் தடுத்தல்; மீத்தேன் மாசுக்காற்றைக் கட்டுப்படுத்துதல்; 2035ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் ஊர்திகளை ஒழித்தல்; நிலக்கரி, பெட்ரோல், டீசல் இல்லாத காலத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக நாடுகளுக்கிடையே தன்னார்வ ஒப்பந்தங்கள் இம்மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சியளிக்கும் முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை.

காலநிலை மாற்றத்துக்குக் காரணமான நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 17.5% அளவினைக் கொண்டுள்ள இந்தியாவின், வளிமண்டல மாசுபாட்டுப் பங்களிப்பு வெறும் 4% மட்டுமே. உலகின் சராசரி தனிநபர் மாசுக்காற்று அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியர்களின் பங்காகும். அவ்வாறு இருக்கும்போது காலநிலை மாற்றத்திற்குக் காரணமான நாடுகள், இந்தியா போன்ற நாடுகளில் புவி வெப்பமயமாதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவுவதுதான் நியாயமான செயலாக இருக்கும்”.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x