Published : 15 Nov 2021 10:57 AM
Last Updated : 15 Nov 2021 10:57 AM

திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் வித்யாலாயம் பகுதியில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் நேற்றைய தினம் திணேஷ் , வடிவேல் என இருவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் உரிமையாளர் தனலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் நேற்று (நவம்பர் 14 ஆம் தேதி) ராமகிருஷ்ணன், வடிவேல் , நாகராஜ், என்ற 3 பேர் சாய ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் உள்ளே இறங்கி ஈடுபட்டனர்.

அப்போது வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறியுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியில் இருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும் , நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்றச் சென்றுள்ளனர்.

இதில் விஷவாயு அதிகமாக தாக்கி வடிவேலு என்ற தொழிலாளரும் , காப்பாற்றச் சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர்.
நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்ற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ராஜேந்திரன் இன்று (நவ.15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருந்த நிலையில் உயிரைப் பணயம் வைத்து தொட்டிக்குள் இறங்கி 3 பேரை காப்பாற்றி உள்ளார் தீயணைப்பு வீரர் பாண்டீஸ்வரன். சம்பவ இடத்தில் காவல்துறை துணை ஆணையர் அரவிந்த தலைமையிலான போலீஸார் சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்தவர்களின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x