Published : 15 Nov 2021 09:06 AM
Last Updated : 15 Nov 2021 09:06 AM

கோவை மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு அதிக பட்ச தண்டனை தர வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கோவை மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் உட்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் உயர்ந்த பட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் வருமாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வருத்தத்துக்குரியது.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 11 ஆம் தேதி அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பந்தமாக மாணவி எழுதிய கடிதம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஒரு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டது தெரியவருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளியின் முதல்வர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டும் போதாது.

சக மாணவியின் உயிரிழப்புக்கு பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், பொது நலன் காக்க விரும்புவோரும் நீதி கேட்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டும்.

வேலியே பயிரை அழிப்பதற்கு இனி ஒருபோதும் தமிழகப் பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் தான் குரு. அப்படி குரு ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு முன்மாதிரியாக, நல்ல பழக்கவழக்கத்தில் சிறந்தவராக விளங்க வேண்டும்.

மாணவச் செல்வங்களே உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு, தொல்லைகள், பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக பெற்றோருக்கு தெரியுங்கள். தைரியமாக இருங்கள்.

ஆசிரியர் பெருமக்களே நீங்கள் ஒருபோதும் உங்கள் கடமையிலும், பணியிலும் தவறில்லாமல் மாணவர்களின் முன்னேற்றம், வருங்கால நலன் ஆகியவற்றை கவனத்தில் வைத்து செயல்படுங்கள்.

பள்ளி நிர்வாகத்தினரே ஒருபோதும் மாணவர்களின் நலன் காக்க தவறாதீர்கள்.

தமிழக அரசே மாணவச் செல்வங்களின் பாதுகாப்பான கல்விக்கும், கற்றலுக்கும் உறுதுணையாக இருங்கள்.

மேலும் இது போன்ற சம்பவம் இனி தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடைபெற வேண்டும். மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஆசிரியர் உட்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் உயர்ந்த பட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த மாணவியின் இழப்பு பெற்றோருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

மாணவியை இழந்து வாடும் பெற்றோருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x