50 ஆயிரம் இடங்களில் 8-ம் கட்டமாக மெகா முகாம்; தமிழகம் முழுவதும் 16.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சென்னையில் நடந்த சிறப்பு முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட லாக்மா நகரில் கரோனா தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். உடன் அமைச்சர் எ.வ.வேலு, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்.
சென்னை வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட லாக்மா நகரில் கரோனா தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். உடன் அமைச்சர் எ.வ.வேலு, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நடந்த 8-வது கட்ட மெகா முகாமில் 16.32 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த செப்.12, 19, 26, அக்.3, 10 ஆகியதேதிகளில் நடந்த மெகா முகாம்களில் 1.10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மது அருந்துகிற, அசைவம் சாப்பிடுகிற நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை பலரும் ஊசி போட்டுக்கொள்ள வருவதில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, மெகா முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, அக்.23, 30-ம் தேதிகளில் 39.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர் மழையால் கடந்த வாரம் முகாம் நடத்தப்படவில்லை.

இதற்கிடையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, முகாமை மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடந்தது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் செயல்பட்டது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். குறிப்பிட்ட அவகாசம் முடிந்தும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 75 லட்சம் பேருக்கு முன்னுரிமை அளித்து முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.

சென்னை, வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட லாக்மா நகரில், கரோனா தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்புமருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆய்வுசெய்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த முகாம்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தனர். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த 8-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் முதல் தவணை 5.44 லட்சம் பேர், இரண்டாவது தவணை 10.87 லட்சம் பேர் என மொத்தம் 16.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இப்பணியில் ஈடுபட்ட சுகாதாரப்பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி மையங்கள் செயல்படாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in