தமிழகத்தில் சம்பா பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்: விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள்

தமிழகத்தில் சம்பா பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்: விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள்
Updated on
1 min read

தமிழகத்தில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடுசெய்ய இன்று (நவ.15) கடைசி நாள் என்பதால் விவசாயிகள் தாமதமின்றி காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2021-22 ஆண்டுக்கான சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு செய்யும் பணி, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்.15-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை 20.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 10 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பா நெற்பயிருக்கான காப்பீடு செய்ய இன்று கடைசிநாளாகும். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்வற்கான காலம் இன்றுடன் (நவ.15) முடிவடைகிறது. எனவே, காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீட்டுக்கு வரும் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசிடம் இருந்து பதில் வராத நிலையில், விடுமுறை நாளான நேற்றும் பயிர்க் காப்பீடு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in