

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மாநில அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில், இளம் பெண்கள் மற்றும் பெண் சிறார்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் தொடர்கின்றன.
18 வயதுக்கு குறைவான வயதுடைய சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டால் ‘போக்சோ’ சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.
காவல்துறையினரின் புள்ளி விவரப்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் தற்போது வரை, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் மொத்தம் 326 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கோவை புறநகரில் 90, மாநகரில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவை சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 414 பேரில், திருப்பூரில் 100 சதவீதம் பேரும், ஈரோட்டில் 96 சதவீதம், கோவை யில் 95 சதவீதம், நீலகிரியில் 94 சதவீதம் பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வுஏற்படுத்துவதால், பாதிக்கப்பட்ட வர்கள் தயக்கமின்றி, காவல் துறையிடம் புகார் செய்கின்றனர். இதுவும் போக்சோ வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டாலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை மறுக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும் போது, ‘‘ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பு, சமூக வலைதளங்களில் மூழ்கி முன்பின் தெரியாதவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது, திரைப் படங்களில் வரும் இளம் பருவக் காதல் காட்சிகள் போன்றவை பாலி யல் துன்புறுத்தல்கள் அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன.
இதை தடுக்க, பெற்றோர்களின் கண்காணிப்பு, அன்பான அணுகுமுறை அவசியம். வழக்கமான நடைமுறையில் இருந்து சிறார்களிடம் மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக அவர்களிடம் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களை தடுக்க குற்றவாளிகள் மீதான தண்டனையை அதிகரிக்க வேண்டும்’’ என்றனர்.
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இரா.சுந்தர் கூறும்போது,‘‘பாலியல் குற்றங்கள் என்றால் என்ன? யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிட மும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் ‘எச்சரிக்கை’ என்ற பெயரில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனை குறித்து நோட்டீஸ் வழங்கப்படுகிறது’’ என்றார்.
கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி கூறும்போது, ‘‘சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாலியல் குற்றம் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும். எனவே, தயக்கமின்றி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும். நடப்பாண்டு கோவை சரகத்தில் போக்சோ வழக்கில் ஒருவருக்கு 44 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 8 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனையும், 6 வழக்குகளில் 10 ஆண்டுகள் தண்டனையும், 6 வழக்குகளில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது’’ என்றார்.