

திருப்பூர் அருகே சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில், ஆலையின் மேலாளர் மற்றும் தொழிலாளி உயிரிழந்தனர்.
திருப்பூர் வித்யாலயம் கொத்துக்காடு பகுதியில் தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான சாய ஆலை செயல்படுகிறது. இங்கு சாயக் கழிவுநீர் தேங்கும் 8 அடி ஆழமுள்ள இரு தரைதள தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் (32), நாகராஜ்(48), ராமகிருஷ்ணன் (50), ராஜேந்திரன் (52), பெண் தொழிலாளி ராமு (32) ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாய ஆலையின் மேலாளர் ராமநாதபுரம் மாவட்டம்,தேவிப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் பாண்டியன் (28) மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன.
தொட்டியின் மூடியை திறந்தபோது, வடிவேலுவும், அருகில் நின்ற மேலாளர் தினேஷ்பாண்டியனும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் மயக்கமடைந்தனர். தகவலறிந்து விரைந்துசென்ற வீரபாண்டி போலீஸார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர், 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்த இருவரின் உடல்களும்அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மனிதர்களைக் கொண்டு சாயக்கழிவு தொட்டிகளை சுத்தம் செய்யக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே உள்ளன. அதையும் மீறி இத்தகைய செயலில்ஈடுபட்டுள்ளனர். சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை வீரபாண்டி போலீஸார் கைது செய்துள்ளனர்.’’ என்றனர்.