

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் கல்வி விகிதம் என்பது ஆண்களை ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. பெண்கல்வி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,56,680 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 5,81,792 பேர் ஆண்கள்; 5,74,888 பேர் பெண்கள். பெண்களை விட ஆண்கள் 6,904 பேர் மட்டுமே அதிகம். சதவீதத்தில் பார்க்கும்போது 0.59 சதவீதம் ஆண்கள் அதிகமாக உள்ளனர்.
எழுத்தறிவு பெற்றோர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்றோர் 8,34,783 பேர். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 4,53,558 பேர்; பெண்கள் 3,81,425 பேர். மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்ற ஆண்கள் 39.1 சதவீதம் பேர். எழுத்தறிவு பெற்ற பெண்கள் 32.9 சதவீதம் பேர். ஆண்களை விட எழுத்தறிவு பெற்ற பெண்கள் 6.2 சதவீதம் குறைவாக உள்ளனர். பெண் கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்து வரும் சூழலில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் மிகவும் குறைவாக உள்ளனர். எனவேகாஞ்சி மாவட்டத்தில் பெண் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டங்களில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள மொத்த பெண்களில் 58.79 சதவீதம் பெண்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர். வாலாஜாபாத்தில் இந்த விகிதம் 59.67 சதவீதமாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர்பகுதியில் 63.32 சதவீதமாகவும், காஞ்சிபுரத்தில் 68.29 சதவீதமாகவும் உள்ளது. குன்றத்தூர் பகுதியில் 71.25 சதவீதம் அளவுக்கு பெண்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். சென்னையை ஒட்டிய குன்றத்தூர் பகுதி தவிர மற்ற பகுதிகளில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.
இதுகுறித்து தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் செயலர் காஞ்சி அமுதன் கூறும்போது, “உத்திரமேரூர், வாலாஜாபாத் போன்ற வட்டங்கள் அதிக கிராமங்களை உள்ளடக்கியவை. கிராமங்கள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே பெண் கல்வி குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் பலர் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. பெண் பிள்ளைகளை படிக்க வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் பள்ளி செல்லும் நேரத்தில் போதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் பள்ளிசெல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.அல்லது அந்தந்த கிராமங்களிலேயே படிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
எழுத்தறிவு பெற்றவர்களே குறைவாக உள்ள சூழலில் மேல்நிலைக் கல்வி வரை வந்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். எனவே, உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட கிராமப் பகுதிகளில் கல்வி வளர்ச்சிக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.