Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM

குரூஸ் பர்னாந்து சிலைக்கு மரியாதை

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா இன்று (நவ.15) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு தமிழக அரசு குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நேற்று குரூஸ் பர்னாந்து சிலைக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கனிமொழி எம்.பி. கூறும்போது, “தூத்துக்குடி மாநகரின் தந்தையாக போற்றப்படக்கூடிய ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையிலும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மணிமண்டபம் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை தமிழக முதல்வர் தற்போது நிறைவேற்றி தந்துள்ளார். சிலை உள்ள இடத்திலேயே மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x