Last Updated : 14 Nov, 2021 08:25 PM

 

Published : 14 Nov 2021 08:25 PM
Last Updated : 14 Nov 2021 08:25 PM

புதுச்சேரியில் ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு இடம் மிகக் குறைந்த வாடகையில் ஒதுக்கி அதிகாரிகள் முறைகேடு: ஆளுநர், முதல்வரிடம் புகார்

பிரதிநிதித்துவப்படம்.

புதுச்சேரி

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு இடம் மிகக் குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்து பலகோடி அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்தி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர், முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 100 கோடி மதிப்புள்ள அரசு இடம் தனியார் பள்ளிக்கு மிக குறைந்த வாடகையில் ஒதுக்கீடு புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை உயர்த்தாமல் அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதால் பல கோடி அரசு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் பல்கலைக்கழகத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பல்கலைக்கழகத்திற்கு தேவையான கட்டிடங்கள் கட்டப்பட்டது போக மீதி இருந்த இடங்களில் சிறைச்சாலை, சட்டக்கல்லூரி, சுனாமி குடியிருப்பு, மத்திய அரசின் நவோதயா பள்ளி ஆகியவை கட்டப்பட்டது.

இருப்பினும் தனியார் பள்ளி ஒன்றுக்கு அரசு வாடகை ஒப்பந்த அடிப்படையில் நிலங்கள் அளிக்கப்பட்டதாக அறிந்து ஆர்டிஐ மூலம் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி விண்ணப்பித்தார்.

இதில் கிடைத்த தகவல்கள் தொடர்பாக ஆளுநர், முதல்வர், டெல்லியிலுள்ள கணக்கு தணிக்கை அலுவலர் ஆகியோருக்கு புகார் தந்துள்ளார். அதுதொடர்பாக அவர் கூறியதாவது:

''புதுச்சேரியில் கடந்த 2004-ஆம் ஆண்டு டாக்டர் செரியன் அறக்கட்டளைக்கு (The Study international school) 8.84ஹெக்டர் அதாவது 21.84 ஏக்கர் நிலங்களை ஆண்டிற்கு ரூ. 6.36 லட்சம் வாடகைக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இடத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்போதைய நிலை மதிப்பீட்டின் படி வாடகை வசூலிக்கவேண்டும். அத்துடன் 19 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட இடம் மீதம் இருந்தாலும் பல அரசு கட்டிடங்கள் வாடகை இடத்தில் இயங்கி வரும் நிலையில் இதனை அரசு பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல் தனியார் அறக்கட்டளைக்கு மிகக் குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக இந்த ஒப்பந்தத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அப்போதைய நிலை மதிப்பீட்டின்படி வாடகை வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் 2004ல் நிர்ணயித்த வாடகையைதான் இப்போது வரை வசூலிக்கின்றனர்.

குறிப்பாக துணை மாவட்ட ஆட்சியர் (வடக்கு) குறிப்பிட்டுள்ளபடி 01.04.2009 மதிப்பீட்டின்படி ரூ. 1.14 கோடி ஆண்டு வாடகை வசூலித்திருக்க வேண்டும். ஆனால் அதுபோல் அதிகாரிகள் செய்யவில்லை. கடந்த 2014, 2019 அடுத்தடுத்த 5 ஆண்டுகளுக்கும் வாடகை உயர்த்தி வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் ஒப்பந்த போடப்பட்ட பொழுது நிர்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகையினை மட்டும் தற்போது வசூலித்து வருகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 18.32 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த 5 ஆண்டுகளுக்கு வாடகையை உயர்த்தி வசூலிக்காததால் மேலும் கூடுதலாக பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே ஒப்பந்தத்ததில் குறிப்பிட்டுள்ளபடி வருவாய்த்துறை கூறியுள்ளதுபோல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அன்றைய மதிப்பீட்டின்படி வாடகையை உயர்த்தி வசூலக்காத கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்த காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகாலம் உள்ள நிலையில், ஒப்பந்த நீட்டிப்பு அளிக்காமல் இந்த இடத்தை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x